search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சோளிங்கர் நரசிம்மர்"

    சோளிங்கருக்கு வந்து நரசிம்மருக்கு உரிய முறையில் வழிபாடுகள் செய்து பேய், பில்லிசூனியம் அகன்று உடலும் மனதும் ஆரோக்கியம் அடைந்து வாழ்வில் மேன்மைகள் பெறலாம்.
    ஒருநாள் தங்கி இருந்தாலே மோட்சம் தரக்கூடியது கடிகாசலம் என பெயர் கொண்டு விளங்கும் சோளிங்கர் திருத்தலம். பன்னிரு ஆழ்வார்களில் பேயாழ்வார், திருமங்கை ஆழ்வார், ஆசாரியார்களில் ஸ்ரீமந்தநாத முனிகள், திருக்கச்சி நம்பிகள், ஸ்ரீராமானுஜம், மணவாள மாமுனி போன்றோர் மங்களா சாசனம் செய்த பெருமையும் பெற்ற ஸ்தலம் இது.

    பில்லி சூனியம், தீராவினை, மனக்குறை ஆகியவற்றால் துன்புறுவோர் இங்கு வந்து சேவை புரிந்தால் துயரம் சூரியனைக் கண்ட பனிபோல் கரையும். புராணத்திலேயே இந்த தலம் காசி, கயைக்கு நிகரானது என்று போற்றப்பட்டுள்ளது.

    பிரம்ம தீர்த்தம், பைரவ கலா வர்த்த தீர்த்தம், கவுதம தீர்த்தம், அகத்திய தீர்த்தம், வராக தீர்த்தம், அனுமத் தீர்த்தம், பாண்டவ தீர்த்தம் போன்ற தீர்த்த நிலைகள் இருக்கின்றன. இதில் நீராடினால் பாவம் தொலையும், நன்மை விளையும்.

    கலியுகத் தொடக்கத்தில் பேய், பிசாசு போன்றவற்றின் தொல்லைகளில் மக்கள் நிம்மதி இழந்தனர். அவர்களிடம் இரக்கம் கொண்ட பிரம்மன், பிரம்ம தீர்த்தக் கரையில் தவம் இருந்தார். அவர் முன்பு நரசிம்மர் தோன்றி ‘பிரம்மா’ உனக்கு என்ன வரம் வேண்டும்? என்று கேட்டார். ‘மக்கள் நோய் நொடியின்றியும் பேய், பிசாசு தொல்லை இன்றியும் வாழ அருள வேண்டும்’ என்று பிரம்மா கேட்டுக் கொண்டார். பிரம்மனுக்கு படைப்புத் தொழிலை யாதொரு இடையூறின்றி பண்ண நரசிம்மர் பணிந்தார். ஆஞ்சநேயருக்கு தம் சங்கு, சக்கரங்களை அளித்து எதிரே உள்ள சிறிய மலையிலிருந்து தன்னை நாடி வரும் பக்தர்களின் விருப்பங்களை, நிறைவேற்றுமாறும் அங்கேயே நித்தியவாசம் புரியமாறும் கட்டளையிட்டார்.

    சப்தரிஷிகளும் வாமதேவர் என்ற முனிவரும் பிரகலாதனுக்காக பெருமாள் காட்டிய நரசிம்ம அவதாரத்தை தங்களுக்கும் காட்ட வேண்டும் என்றும் இந்த மலையில் வந்து தவம் இருந்தனர். அப்போது கும்போதிர கால்கேயர் என்னும் அரக்கர்கள் தவத்திற்கு இடையூறு செய்தனர். அப்போது அரக்கர்களால் வரும் இடையூறுகளை அழிப்பதற்கு நரசிம்மர், ஆஞ்சநேயரை இந்த மலைக்கு அனுப்பி வைத்தார். நரசிம்மர் வழங்கிய சங்கு, சக்கரங்களை பெற்றுக் கொண்ட ஆஞ்சநேயர் அரக்கர்களின் தலைகளைக் கொய்தார். ரிஷிகளுக்கு நரசிம்ம அவதாரத் தோற்றத்தை மீண்டும் காண்பித்தார் பெருமாள்.

    மலை மீது இறைவனை தரிசிக்கும்போது மனமும் உடலும் தூய்மை அடைகிறது. பில்லி சூனிய பீடைகள் அகன்று உடலில் உள்ள துர்நீர் உதிர்ந்து ஆரோக்கியமான உடம்பும் மீண்டும் கிடைக்கிறது. படியேறி வழிபடும் அளவுக்கு உடல் உரம் இல்லாத முதியவர்கள் கீழிருந்து திருக்கடிலையும் பெருமாளையும் ஆஞ்சநேயரையும் மனதில் நினைத்தாலே போதும், மோட்சம் கிட்டும். வருடம் முழுவதும் விழாக்கோலம் கொள்கிறது சோளிங்கர்.

    இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்தும், அலை, அலையாக மக்கள் வந்து வணங்கும் சோளிங்கருக்கு நீங்களும் போய் உரிய முறையில் வழிபாடுகள் செய்து பேய், பில்லிசூனியம் அகன்று உடலும் மனதும் ஆரோக்கியம் அடைந்து வாழ்வில் மேன்மைகள் பெறலாம்.
    ×